"கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் 233 பேருக்கு அறுவைச் சிகிச்சை'
தஞ்சாவூர், அக். 26: தஞ்சாவூர் மாவட்டத்தில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 233 பேருக்கு அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் மு. கருணாகரன்.
தஞ்சையில் திங்கள்கிழமை நடைபெற்ற இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கத்துக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:
இத்திட்டத்தின் கீழ் திருவையாறு வட்டத்தில் 29,835, பாபநாசம் வட்டத்தில் 43,045, பேராவூரணி வட்டத்தில் 29,187, ஒரத்தநாடு வட்டத்தில் 43,441 குடும்பங்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
நோயாளிகளுக்கு ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு நிறுவனம் ரூ. ஒரு லட்சம் வரை சிகிச்சை அளிக்க வழங்குகிறது. ஆண்டுக்கு ரூ. 72,000 வருமான வரம்பு தகுதியுள்ள, கடும் நோயினால் பாதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வசதியில்லாத பொதுமக்கள் அனைவரும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என்றார் கருணாகரன். தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் மருத்துவர் காமாட்சி, பயிலரங்க விளக்கவுரையை படவிளக்கத்துடன் தெரிவித்தார். ஸ்டார் ஹெல்த் பொது மேலாளர் ரவீந்திரன், 108 சேவை வில்லியம் ஆகியோர் பேசினர். சுகாதாரத் துறை துணை இயக்குநர் மருத்துவர் மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஸ்ரீமாலினி வரவேற்றார். ஸ்டார் ஹெல்த் மண்டல மேலாளர் அருள்பழநி நன்றி கூறினார்.







